
மருந்து சீட்டில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த தகவல் வெளியானது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அமைச்சர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தனர்.
அதனால் நீதிமன்ற வளாகத்தை விட்டு அவர்கள் நகரவே இல்லை. அன்று மாலை 6:30 மணிக்கு ஜெயலலிதாவை, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்த பின்னும் அவர்கள் அங்கிருந்து கிளம்பவில்லை.
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் மட்டும் பெங்களூரில் தங்கியிருந்தனர்.
இதே நேரத்தில், மத்திய உள்துறை அளைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுனரிடம், தமிழக நிலவரம் பற்றியும், வன்முறை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.
அதனால் நேற்று காலை 8.30 மணியளவில் சிறையில், ஜெயலலிதாவை சந்தித்து, அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மூத்த தமிழக அமைச்சர்கள் சென்றனர்.
ஆனால், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால், சிறைவாசிகளை சந்திக்க, பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
அதையடுத்து அமைச்சர்கள் இக்கட்டான நிலையில் செய்வதறியாமல் ஆழ்ந்து இருந்தனர். அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் சிறைக்குள் அனுப்பப்படும் என்று அவர்களுக்கு தெரியவந்தது.
உடனே அதனை பயன்படுத்தி மருந்து சீட்டு மூலம் அடுத்த முதல்வரின் பெயரை அமைச்சர்கள் அறிந்துகொண்டதாக கூறப்படுகிறது.





