விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழப்பு!!

18

தெலங்கானாவில் விநாயகர் சிலையை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலைகள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். தெலங்கானா மாநிலம், படஞ்சேரு மண்டலத்தில் உள்ள இனோலே கிராமத்தில் அமைந்துள்ள சிரிஷா நினைவு அறக்கட்டளையின் சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், சிரிஷா நினைவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள், நெருடுசெர்லா ஏரியில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஒரு வாகனத்தில் விநாயகர் சிலையை கொண்டு சென்றுள்ளனர்.

ஏரியில் நீருக்கு அடியில் 12 அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதை அறியாத 9 மாணவர்கள், ஆழமான பகுதியில் இறங்கியுள்ளனர். அதில் நீச்சல் தெரிந்த மாணவர்கள், நீச்சலடித்தும் அங்கிருந்த மற்றவர்களின் உதவியுடன் தப்பி தங்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர். நீச்சல் தெரியாத 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் நரசிம்ம ராஜு (18), சுமந்த் (19), கணேஷ் (20), உதய குமார் (21), ஷாம் குமார் (18) மற்றும் சித்தார்த் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டன்செருவு காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படை (DRF), தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் இணைந்து 7 படகுகளைக் கொண்டு நடத்திய மீட்புப் பணியில் 2 மணி நேரத்திற்குப் பிறகு உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த 6 மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து விதமான உதவிகளையும் வழங்குமாறு, இந்தத் துயரச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிரிஷா நினைவு அறக்கட்டளையின் நிர்வாகம், விநாயகர் சிலை கரைப்பதற்கு அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

அறக்கட்டளையின் காப்பாளர் மாணவர்களுடன் சிலை கரைக்கப்படும்போதும் உடனிருந்தாலும், சிலை கரைப்பை மேற்பார்வையிட அவர் நீருக்குள் இறங்கவில்லை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிரிஷா நினைவு அறக்கட்டளையின் காப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.