பல கனவுகளுடன் புறப்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

204

மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் அடுத்த மாதம் இணையவிருந்த 22 வயதான திறமையான மாணவன் ஒருவர், மாரவில கடற்கரையில் வீசிய திடீர் அலை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய, போதிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சலித்த தனுர்தர மதுஷன் விதானகே என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் சிறந்த சித்திகளைப் பெற்று பல்கலைக்கழக பிரவேசத்திற்காக காத்திருந்த காலத்தில், அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இதன்போது, இதுவரை கடலைப் பார்த்திராத தனது சக ஊழியர்கள் அறுவரை, அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மாரவில குருசடி தேவாலயத்திற்கு அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நண்பர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், சலித்த கடற்கரையோரப் பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக வந்த மிகப்பெரிய அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

அவர் ஒரு திறமையான நீச்சல் வீரராக இருந்தபோதிலும், கடலின் நீரோட்டத்திற்கு முன்னால் அவரால் உயிர்தப்ப முடியாமல் போயுள்ளது.

கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, மறுநாள் பிற்பகல் அவரது சடலம் கரையொதுங்கியது. இச்சம்பவம், அவரின் குடம்பத்திற்கு, ஈடுசெய்ய முடியாத பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.