
இந்தோனேசியாவின் அச்சினே (Aceh) மாகாணத்தில் திருமணத்தை மீறிய உறவில் (Adultery) ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் தலா 100 கசையடிகள் (Lashes) பகிரங்கமாக வழங்கப்பட்டன.
இந் நிலையில் சாட்டையடியின் கொடூரமான வலியைத் தாங்க முடியாமல் தண்டனை விதிக்கப்பட்ட பெண் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் கடுமையான ஷரியா சட்டங்கள் அமலில் உள்ள ஒரே தன்னாட்சி மாகாணமாக அச்சினே விளங்குகிறது. அங்குள்ள பண்டா அச்சினே நகரில் பொதுமக்கள் திரண்டிருந்த மைதானத்தில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பிரம்பினால் முதுகில் 100 முறை அடிக்கப்பட்ட போது, கடுமையான வலியால் அலறிய அந்தப் பெண் பாதியிலேயே சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அவருக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து, எஞ்சிய கசையடிகள் அடித்து முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கசையடி தண்டனை நிறைவடைந்ததும் பலத்த காயமடைந்த அந்தப் பெண் அவசர சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதே குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்ட அவரது ஆண் கூட்டாளிக்கும் 100 கசையடிகள் வழங்கப்பட்டன.
இவர்களுடன் சேர்த்து சூதாட்டம் மற்றும் மது அருந்திய குற்றச்சாட்டில் கைதான மேலும் சில நபர்களுக்கும் 20 முதல் 40 கசையடிகள் வரை பகிரங்க தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மாகாணப் போலீசார் தெரிவித்தனர்.
பொதுவெளியில் வழங்கப்படும் இத்தகைய கசையடி தண்டனைகள் மனிதநேயமற்றவை என்றும், சித்திரவதைக்குச் சமமானவை என்றும் சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.





