நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் சாத்தியம் : பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

210

தற்போது நிலவும் மழைக்கால வானிலை நிலமைகள் இம்மாதம் 25ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, ஆற்றுப் படுகைகளுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் விழிப்புடன் இருக்குமாறு பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், வங்காள விரிகுடாவின் கிழக்கு – மத்திய பகுதி மற்றும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இன்று (21.09.2026) வங்காள விரிகுடாவின் கிழக்கு – மத்திய பகுதியில் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (22.09.2026) மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி, இது வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு அருகில், வங்காள விரிகுடாவின் மேற்கு – மத்திய மற்றும் அதனை அண்டிய வடமேற்குப் பகுதியைச் சென்றடைய அதிக வாய்ப்புள்ளது.

குறிப்பாக வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதியில் செயற்படும் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் அறிவுறுத்தியுள்ளார்.