
உத்தரப் பிரதேசம்: லகீம்பூர் கேரியில் உள்ள தனியார் பள்ளியில் பெண் ஆசிரியர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை சுட்டதாகக் கூறப்படும் முன்னாள் காதலனும் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார்.
லகீம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில் 26 வயதான நிஷாத் பாத்திமா ஆசிரியையாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த 28 வயதான முகமது சவுத் அன்சாரி, பாத்திமாவை சந்தித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் பள்ளியின் கீழ்தளத்தில் சிறிது நேரம் பேசிய பின்னர் மேல்தளத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வகுப்பறை அருகே உள்ள நடைபாதையில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அப்போது சவுத் தான் கொண்டு வந்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து நிஷாத் பாத்திமாவை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது பள்ளியில் ஏராளமான மாணவர்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சத்தம் கேட்டதும் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நிஷாத் பாத்திமாவும் சவுத் அன்சாரியும் ஏற்கனவே உறவில் இருந்ததாகவும், சமீபத்தில் அந்த உறவு முறிந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவு முறிவால் ஏற்பட்ட பிரச்சினை இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
எனினும், சம்பவத்தின் முழுமையான காரணம் குறித்து போலீஸ் விசாரணைக்குப் பிறகே உறுதியான தகவல் வெளியாகும்.பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஒருவர் எவ்வாறு நுழைந்தார், பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.





