சொல்வதை செயலிலும் காட்டுங்கள் : தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜயிடம் இலங்கை அமைச்சர் கோரிக்கை!!

91

இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவது தொடர்பில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயிடம் நியாயமாகச் செயல்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடிகராக இருந்து திரைப்படங்களில் சமூக நீதிக்காக குரல் கொடுத்ததைப் போல, இலங்கை கடற்றொழிலாளர்களுக்காகவும் தற்போது நியாயமாகச் செயல்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த ஊடகக் குழுவொன்றின் ஊடாக முதலமைச்சருக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு பகுதி கடற்றொழிலாளர்கள் 30 ஆண்டுகால யுத்தத்தின்போது பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்து வரும் நிலையில், தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதால், வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“வாழ்வாதாரத்திற்காக போராடும் எமது கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்பை பறிப்பது, அவர்களின் கழுத்தை அறுப்பதற்கு சமமானது. சமூக நீதிக்காக திரைப்படங்களில் நடித்த ஒரு நடிகராக, தற்போது தனது பொறுப்பிலும் நியாயமாகச் செயல்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் ஏனைய மாநிலங்களின் கடற்பரப்புகளிலும் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் பாகிஸ்தானின் கடற்பரப்பில் இவ்வாறு செய்தால் என்ன நடக்கும்?” எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு நடைமுறைத் தீர்வு காண்பது தொடர்பில், எதிர்காலத்தில் அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று இந்தியாவுக்குச் செல்லும் எனவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.