பணம், நகையுடன் பெண் ரீல்ஸ் : திட்டம் போட்டு திருடிய கொள்ளையர்கள்!!

19

தமிழகம் நாகர்கோவிலில் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான பெண் ஒருவர், தான் வாங்கும் புதிய தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் பணம் மற்றும் எங்கு செல்கிறோம் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரிலீஸ் ஆக பதிவேற்றி உள்ளார்.

இதற்கு அதிக லைக்குகள் கிடைத்த நிலையில், அதில் மயங்கிய மதுமிதா அந்த நகைகளை அணிந்து கொண்டும், கட்டு கட்டாக பணத்தை மெத்தையில் அள்ளிப் போட்டுக் கொண்டும் மதுமிதா சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி அதனை ரிலீஸ் ஆக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோக்களையும், அவரது நடவடிக்கைகளையும் இன்ஸ்டாகிராம் மூலமாக மர்ம நபர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்து , இவர்கள் இருப்பிடத்தை அறிந்த அந்த கும்பல் இவர்கள் வெளியே சென்ற நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றது.

அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் என அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதன் மதிப்பு ரூ. 1 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலையில், குடும்பத்துடன் வெளியே சென்ற மதுமிதா வீடு திரும்பிய நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக, தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்ட ரீல்ஸ் அடிப்படையிலேயே, இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது