
எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காக செல்லுபடியாகும் வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, வங்கி கணக்குகளை தொடங்குதல், வாகன உரிமங்களைப் பதிவு செய்தல் அல்லது புதுப்பித்தல், நிலம் அல்லது வணிகங்களைப் பதிவு செய்தல், கட்டிடத் திட்ட அனுமதிகளைப் பெறுதல், பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடனட்டைகளுக்கு விண்ணப்பித்தல் ஆகியவற்றுக்குச் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் 2024 ஜனவரி 01 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் 18 வயதை அடைந்த அனைவரும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.
பதிவு செய்யாத நபர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (eservices.ird.gov.lk) ஊடாகப் பதிவு செய்து வரி செலுத்துவோர் அடையாள இலக்க சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புதிய நடவடிக்கை நாட்டின் வரி அடிப்படையை விரிவுபடுத்தும் என்றும், நிதிப்பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை பேணும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.





