
வடக்கு லண்டனில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி மெலிசா பிரேமரத்னே, சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவம் வியாழக்கிழமை காலை சுமார் 8:15 மணியளவில் ஹைக்கேட் பள்ளிக்கு (Highgate School) அருகிலுள்ள நார்த் ரோட்டில் (North Road) நிகழ்ந்தது. தனியார் டாக்ஸி ஒன்று அவர் மீது மோதியதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
விபத்தை ஏற்படுத்திய 68 வயதுடைய ஓட்டுநர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதால், விபத்து தொடர்பான ஏதேனும் தகவல்கள், சிசிடிவி (CCTV) அல்லது டேஷ்கேம் (dashcam) காட்சிகள் இருந்தால் அவற்றை வழங்குமாறு லண்டன் பெருநகரக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மெலிசா, மிகச் சிறந்த திறமைசாலி மாணவி ஆவார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் தத்துவம் பயில வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். தங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கிய மெலிசாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர் .
எதிர்காலம் குறித்த பல நம்பிக்கைகளைக் கொண்டிருந்த இந்த இளம் பெண்ணின் அகால மரணம், ஒட்டுமொத்த பள்ளி சமூகத்தையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கிய வாகனம் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதை ‘அடிசன் லீ’ (Addison Lee) டாக்ஸி சேவை நிறுவனம் உறுதிப்படுத்தியதுடன், காவல்துறை விசாரணைக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறியுள்ளது.





