
இரத்தினபுரி, ரக்வானையில் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகஸ்தரான கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளார். ரக்வானை – கந்தகும்புர பிரதேசத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தாயான நாவலகே நதிகா ஜெயமாலி விக்ரமரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இரத்தினபுரி உப முகாமில் இணைக்கப்பட்டு சேவையாற்றி வந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி பணியை முடித்துவிட்டு போதையில் வீடு திரும்பிய போது மனைவியுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபர் கோப்பி மரத்துண்டொன்றினால் பெண்ணின் தலை மற்றும் உடல் பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. பல காயங்கள் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மரத்துண்டும் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அன்றைய தினம் குறித்த சந்தேக நபர் தனது மாதச் சம்பளத்தை பெற்றுக்கொண்டு இரவு உணவிற்காக ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலின் பின்னர் அதிகாலை இரண்டு மணியளவில் சந்தேக நபர் தனது மனைவியின் அறைக்குச் சென்று பார்த்த போது, அவர் அறையிலுள்ள கட்டிலில் உணர்வற்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சந்தேக நபர் அயலவர்களிடம் சம்பவத்தைக் கூறியதை அடுத்து, ரக்வானை பொலிஸாருக்கும் அம்பியுலன்ஸ் சேவைக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கமைய, பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், தான் மனைவியைத் தள்ளியபோது தலை கட்டிலில் மோதியதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.





