வெள்ளவத்தையில் வீடொன்றில் அதிர்ச்சி சம்பவம் : பல கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை!!

36

கொழும்பு, வெள்ளவத்தை கவிரத்ன பிரதேசத்தில் வசிக்கும் பெண் சட்டத்தரணியின் மாடி வீட்டிற்குள் நுழைந்து, 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்கம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தைத் திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்கு தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் 5 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர், நாட்டின் பதிவு செய்யப்பட்ட பல குற்றங்களுக்கு தொடர்புடைய வெள்ளவத்தை உபயா என அழைக்கப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பல குற்றச்செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர் முச்சக்கர வண்டிச் சாரதி என தெரியவந்து்ளளது. கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 13,180 மில்லிகிராம் போதைப்பொருளும், திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்க ஆபரணங்களில் சுமார் 30 பவுண் எடையுள்ள நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த நபர், மேல் மாடி அறையில் உள்ள அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகத்துடன் சேர்த்து, மொத்தம் 39 பவுணுக்கு அதிக எடையுள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி சட்டத்தரணி இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாரின் விசாரணையின் போது, சந்தேக நபர் வீட்டின் மேல் மாடியின் கூரையை உடைத்து உள்ளே நுழைந்தமை தெரியவந்துள்ளது.

அயல் வீடுகளின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்த போது, அந்த நபர் போர்வையால் பாதுகாப்புப் பெட்டகத்தை மூடிக்கொண்டு தோளில் சுமந்து செல்லும் காட்சிகள் காணப்பட்டுள்ளது. அதன் மூலமாக சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கல்யாணி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டு சோதனையிடப்பட்டார்.

அப்போது அவரிடம் இருந்த போதைப்பொருட்களும், பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட தங்க ஆபரணங்களின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டன. பாதுகாப்புப் பெட்டகத்தைத் திருடிய பின்னர், அவர் சில காலத்திற்கு முன்பு வசித்த போரலஸ்முவ பிரதேசத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அதனை வெட்டி, அதிலிருந்த தங்க நகைகளை எடுத்து, சில நகைகளைப் போரலஸ்முவ பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலும் சில பகுதிகளை நபர் ஒருவருக்கு விற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தங்க நகைகளை அடகு வைத்துப் பெற்ற பணத்திலிருந்து ஆடைகளை வாங்கியுள்ளார்.

அத்துடன், தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 145,000 ரூபாவை வைப்புச் செய்துள்ளதாகவும் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.