
புதுடெல்லியில், 75 வயது மூதாட்டி ஒருவரிடம் ‘டிஜிட்டல் கைது’ செய்ததாகக் கூறி, கம்போடியாவைச் சேர்ந்த மர்மக் கும்பல் ரூ. 2.48 கோடியைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் டொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, புதுடெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயது மூதாட்டி விபா. இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர் ஆவார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி விபாவின் லேண்ட்லைன் எண்ணிற்கு ஒரு போலி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், விபாவின் மொபைல் எண் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற பயங்கரவாத வழக்குகளில் சிக்கியுள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
பயந்துபோன மூதாட்டியை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து கம்போடியாவைச் சேர்ந்த சர்வதேசக் கும்பலொன்று வாட்ஸ்அப் காணொளி அழைப்பு (Video Call) மூலமாக 22 நாட்களுக்கும் மேலாக, 24 மணி நேரமும் ஆன்லைனில் சிறைபிடித்து (டிஜிட்டல் கைது) வைத்துள்ளது. மேலும், அவர் யாரிடமும் பேசக்கூடாது என்றும், மீறினால் சிறையில் அடைப்போம் என்றும் மிரட்டியுள்ளனர்.
விசாரணை என்ற பெயரில் மூதாட்டியின் வீட்டிற்கே தங்களது போலி ஆட்களை அனுப்பிய மோசடிக் கும்பல், அவரை வற்புறுத்தி வசந்த் குஞ்ச் பகுதியில் இருந்த அவரது வீட்டை விற்க வைத்து ரூ. 2.40 கோடியைப் பறித்துக்கொண்டது.
வீட்டுப் பணம் மட்டுமன்றி, அவரிடமிருந்த 83.5 கிராம் தங்க நகைகளைக் (வளையல்கள், செயின் மற்றும் கம்மல்கள்) கட்டாயப்படுத்தி முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தில் அடகு வைக்கச் செய்து சுமார் ரூ. 4.95 லட்சத்தையும், அவரது பேங்க் ஒஃப் மகாராஷ்டிரா கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக ரூ. 3 லட்சத்தையும் அந்தக் கும்பல் சுருட்டியுள்ளது.
இவ்வாறாக, வீடு, நகைக்கடன் மற்றும் வங்கிச் சேமிப்பு என அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ. 2.48 கோடிக்கும் அதிகமான பணத்தை அந்த மூதாட்டி கொள்ளையர்களிடம் இழந்துள்ளார்.





