
வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தற்போதைய எல் நினோ காலநிலை நிலைமைகள் மற்றும் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வது குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

எல் நினோ தாக்கத்தால் மழைவீழ்ச்சி முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், திடீர் வெள்ளப்பெருக்கு, தீவிர வறட்சி மற்றும் ஏனைய சாத்தியமான இயற்கை அனர்த்தங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளச் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைசார் நிறுவனங்களும் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் அனர்த்த காலங்களில் நிறுவனங்களுக்கு இடையே திறம்படச் செயல்படும் பயனுள்ள ஒருங்கிணைப்பு பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வவுனியா மாவட்டச் செயலாளர் பி. ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், முப்படையினர், நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.







