இளம் பெண்ணை ஏமாற்றி நகைகளுடன் தலைமறைவான காதலன்!!

87

மாத்தறை மிரிஸ்ஸ நகரில் சுற்றுலா விடுதியொன்றை நடத்தி வரும் பெண்ணொருவருடன் நெருக்கமான உறவைப் பேணி, அவரை ஏமாற்றி பெருமளவிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 32 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புஞ்சிகுளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் கடந்த 30ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணி மற்றும் வீடு ஒன்றை அனுராதபுர பகுதியில் வாங்கிக் கொடுப்பதாக கூறி, சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி குறித்த பெண்ணை கவர்க்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு, போதைப்பொருள் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சூப் வகையொன்றை பெண்ணுக்கு அருந்தக் கொடுத்துள்ளதாகவும், அதனை அருந்திய பின்னர் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பெண்ணின் காரில் இருந்த சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணி கொள்வனவு செய்வதற்காக குறித்த பெண் அந்த நகைகளை எடுத்துச் சென்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.