எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் கடுமையான நடைமுறை – அறிமுகமாகும் புதிய QR குறியீட்டு முறை…………..!!

42

எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நச்சுப்பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை இலகுவில் அடையாளம் காணும் வகையில் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற “பிள்ளைகளுக்கு நச்சற்ற பழங்கள்” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதிலும் உள்ள பழ வியாபாரிகள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களைப் பதிவு செய்யும் பணிகளும், அவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இன்றிலிருந்து தொடங்குகின்றன.

நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பழங்களைப் பழுக்க வைக்கும் முறைகள், பண்ணைகளில் பழங்களை அறுவடை செய்யும் முறைகள் மற்றும் நுகர்வோருக்குப் பாதுகாப்பாக விநியோகிப்பது தொடர்பான பயிற்சிகள் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும்.

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அவர்களுக்குச் சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

தீவு முழுவதிலும் உள்ள பழக்கடைகளைக் வரைபடமாக்கி, நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் கடைகளைச் சிறப்பான QR குறியீடு மூலமாக நுகர்வோர் இலகுவாக அடையாளம் காணக்கூடிய புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

எனவே, உரிய வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைவாக, நச்சுப் பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தியுள்ளார்.