வவுனியாவில் தென்னை மரத்தை தாக்கிய இடி : தென்னைமரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

370

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று (04.10.2026) மாலை பெய்த மழையின் போது தென்னை மரம் ஒன்றின் மீது இடி தாக்கியதில் மரம் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று மாலை வவுனியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது, தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள தென்னை மரம் ஒன்றின் மீது திடீரென இடி விழுந்துள்ளது.

இடி தாக்கிய கணத்திலேயே தென்னை மரத்தின் உச்சியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அயலவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வவுனியா மாநகரசபை தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், உடனடியாகச் செயற்பட்டு தென்னை மரத்தில் எரிந்துகொண்டிருந்த தீயை விரைவாக அணைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்புப் படையினரின் துரிதமான மற்றும் சாதுரியமான நடவடிக்கையால் தீ அருகிலுள்ள வீடுகளுக்கோ அல்லது ஏனைய இடங்களுக்கோ பரவாமல் பெருஞ்சேதம் தவிர்க்கப்பட்டது.