பேஸ்புக் மூலம் அறிமுகமான நபருடன் வாழ்ந்த பெண் :கொலை சந்தேகநபர் கைது!!

74

இங்கிரிய – ரத்மல்கொட பிரதேசத்தில் வசித்த பேசும் திறன் அற்ற பெண்ணொருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு ஆணுடன் வாழ்ந்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இங்கிரிய, ரத்மல்கொட பிரதேசத்தில் வசித்த பேசும் திறன் அற்ற பெண்ணொருவர் தனது தாயுடன் அப்பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான அநுராதபுரத்தின் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த, பேசும் திறன் அற்ற ஒரு ஆணை தன் வீட்டுக்கு வரவழைத்து தங்க வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண்ணின் தயார் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்குத் தீர்த்த யாத்திரை சென்றிருந்ததால், வீட்டில் உயிரிழந்தவரும் அவரது நண்பரும் மட்டுமே இருந்துள்ளனர்.

அதன்போது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டில் தங்க வைத்துக் கொண்ட ஆண் நண்பரின் தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய ஆண், அநுராதபுரப் பகுதிக்குச் சென்று தனது பெண் உறவினர் ஒருவரிடம் தாக்குதல் சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் சந்தேக நபரை ஹொரணை பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்று பொறுப்பதிகாரியிடம் தகவலைத் தெரிவித்துள்ளார். பொறுப்பதிகாரி சந்தேகநபருடன் அந்த வீட்டிற்குச் சென்று கதவைத் திறந்து சோதனையிட்டபோது, ​​ஒரு அறையில் இருந்த படுக்கையில் குறித்த பெண் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.

அவர் உயிரிழந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ள நிலையில் பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறே இச்சம்பவத்திற்குக் காரணம் என்றும், அப்போது சந்தேகநபர் தடி போன்ற ஒரு பொருளால் உயிரிழந்தவரைத் தாக்கியிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் அந்த ஆயுதத்தின் உடைந்த துண்டுகள் கிடந்ததும் ஆய்வின்போது கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.