இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வீழ்ச்சிப் பாதையில் இலங்கைப் பொருளாதாரம்!!

14

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் இரண்டு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் வீழ்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளமை புள்ளிவிபரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு மீண்டெழுந்த பொருளாதாரம் கடந்த வருடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பொருளாதார வளர்ச்சி வேகம் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளமையை புள்ளிவிபரங்கள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளன.

2022ல் சந்தித்த முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த இலங்கை பொருளாதாரம், கடந்த ஆண்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சுருக்கத்தைக் கடந்து, 2023 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளிலும் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்தது.

இருப்பினும், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த எட்டு காலாண்டுகளில் பதிவான மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமாகும்.

அதேநேரம் இந்த ஆண்டில் 3.5 வீத பொருளாதார வளர்ச்சியையே இலங்கை எதிர்பார்க்க முடியும் என்று உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

ஆயினும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியையும் சேர்த்து, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 4 சதவீதத்தைத் தாண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-