மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆறு வழிகள்!!

641

family

பிரச்சினைகள் எதுவுமின்றி சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆசையா இதோ மகிழ்ச்சியாக வாழ ஆறு வழிகள்.

உறவு முக்கியம்

திருமண வாழ்வு என்பது வாழ்நாள் முழுவதற்கும் தொடரும் உறவு என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண பந்தத்தின் நோக்கமும் இதுவே.

மாறாத அன்பு

எவ்வளவு வழிகளில் முடியுமோ, அவ்வளவு வழிகளிலும், எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறைகளும் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று உங்கள் துணையிடம் கூறுங்கள். இந்த வார்த்தைகள் உங்களவளின் உள்ளத்தை அசைப்பதாக இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கைப் புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்களை சுவையானதாக்கும்.

வேறுபட்ட சூழல்

இரண்டு வேறுபட்ட சூழலில் இருந்த இருவர் வாழ்க்கையின் பொருட்டு ஒன்று சேரும்போது அன்பு, காதலுக்கு இணையாகவே வாக்குவாதங்களும், சண்டைகளும் எட்டிப்பார்க்கும். இந்த மாதிரியான பிரச்சினைகள் கூட பலநேரங்களில் ஊடலில் இருந்து தான் தொடங்கும்.

பலநேரங்களில் அன்பின் ஆழத்தை அதிகரிக்கவேண்டிய இந்த ஊடலுக்குள் ஈகோ புகுந்து முரண்பாட்டை அதிகரித்து விடும். இந்த முரண்பாடுகளை கோபமான வார்த்தைகளில் வெளிப்படுத்துவதால் பாதிப்பு நேரலாம். விபரீதம் உணர்ந்து யாராவது ஒருவர் இறங்கி வர வேண்டும்.

கால மாற்றங்கள்

தம்பதியர் ஒருவர் மற்றவரை தரக்குறைவாக எடைபோடக்கூடாது. இவர் நம்மவர், இவள் நம்மவள் என்கிற உணர்வே இதயத்தின் ஆக்கிரமிப்பாக இருக்க வேண்டும்.

இந்த ஆக்கிரமிப்பு மட்டும் கண்மூடித்தனமாக இருந்தாலும் தப்பில்லை. வாழ்க்கை இனிக்குமே.தம்பதியருக்கு மனஅழுத்தம் பலவிதங்களில் வரலாம். நோய்கள், பணப்பிரச்சினை, தொழிலில் ஏற்றத்தாழ்வுகள், அண்டை அயலாருடன் மோதல், கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் வரலாம்.

இப்படிப்பட்ட தம்பதியினருக்கு மோசமான எதிரி நம்பிக்கை இழப்பு. சந்தேகம் முன் வாசல் வழியாக நுழைந்தால் அன்பு பின்வாசல் வழியாகப் போய்விடும்.

வலியுறுத்துங்கள்

கணவன் குடிகாரனாகவும், மனைவி குறை கூறுபவளாகவும் இருந்து விட்டால், பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. மற்றவர்கள் இவர்களை சந்திக்கும் போது ஒருவர் மீதான குறையை மற்றவர் நாசூக்காக வெளிப்படுத்தலாம். இந்த மறைமுக வலியுறுத்தலுக்கு நாளானாலும் பலன் உண்டு.

தொழிலை மதியுங்கள்

அடுத்தது தம்பதியருக்குள்ளான தொழில் மரியாதை. மனைவியின் வேலை மதிப்பு மிக்கதாக இல்லை என்று கணவன் உதாசீனம் செய்தால், அது அவளைக் கவலைப்படுத்தி விடும். அதே போல், மனைவி உயர்ந்த பதவியில் இருந்து கணவனை விட அதிகம் சம்பாதித்தால், அதனால் உண்டாகும் பொறாமை கணவனை அரித்து விடும். அவன் அவளைப் பலவழிகளில் காயப்படுத்துவான். அலுவலக பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வருவது இருவருக்கும் நல்லதல்ல.

பிரச்சினையின் ஆழத்தை இரண்டு பேரின் பார்வையிலிருந்து பார்ப்பது எப்போதும் நல்லது. இரண்டு பக்கங்களிலுமே மாறுபட்ட கருத்துக்கள் எழலாம். ஆனால், வேற்றுமைகளை உடனே களைய வேண்டும். தாமதமானால், சமாதானம் ஏற்பட தொழில் முறை குடும்பநல ஆலோசகர்களைத் தொடர்பு கொள்ளலாம்.