மாணவர்களை ஏற்ற மறுத்ததாகக் குற்றச்சாட்டு : இ.போ.ச. சாரதி தற்காலிக இடைநிறுத்தம்!!

97

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

பனிக்கன்குளம், கிளவன்குளம், திருமுறிகண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை முடிவடைந்த பின்னர் பேருந்துக்காகக் காத்திருந்த நிலையில், ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாணவர்களை ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், பேருந்தில் ஏறிய மாணவி ஒருவர் தவறி விழ நேரிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஊடகங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பேருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் கண்டி சாலைக்குரியது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட சாரதியை தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் பயணிகளுக்கும் குறிப்பாக மாணவர்களுக்கும் அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.