
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், கணவரை நல்லபாம்பைக் கடிக்கச் செய்து கொலை செய்துவிட்டு, பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய மனைவியும் அவரது கள்ளக்காதலனும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அமித் காஷ்யப் (31) என்பவர் கடந்த ஆண்டு (ஏப்ரல் 13, 2025) மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மனைவி ரவிதா காஷ்யப், தனது கணவர் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.
அமித் காஷ்யப்பின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவருக்குப் பாம்பு கடித்ததற்கான சுவடுகள் இருந்தபோதிலும், மூச்சுத்திணறல் மற்றும் கழுத்து நெரிப்பு போன்ற காரணங்களால்தான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், மனைவி ரவிதா காஷ்யப் தனது 20 வயது கள்ளக்காதலன் அமர் தீப் என்பவருடன் சேர்ந்து, ஒரு நல்லபாம்பை விலைக்கு வாங்கி வந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரைக் கடிக்கச் செய்துள்ளனர் என்பதை உறுதி செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமித் காஷ்யப்பைக் கொலை செய்த வழக்கில் அவரது மனைவி ரவிதா காஷ்யப் மற்றும் கள்ளக்காதலன் அமர் தீப் இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளன.





