வவுனியாவில் புகையிரதக் கடவையில் நூலிழையில் தப்பிய பேரூந்து!!

19

வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள ஓகான் (ORHAN) நிறுவனத்திற்குச் சொந்தமான, மாற்றுத்திறனாளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்டவேளையில், கடவை ஊழியரின் கடுமையான அலட்சியப்போக்கால் ஏற்படவிருந்த பாரிய விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

புகையிரதம் கடந்துசெல்லும் நேரத்தில், புகையிரதக் கடவையின் பாதுகாப்புக் கதவுகள் பூட்டப்படாமல் திறந்த நிலையிலேயே காணப்பட்டுள்ளன. அத்துடன், அப்பகுதிக்கு வந்த புகையிரதமும் எச்சரிக்கை ஒலி (ஹோர்ன்) எழுப்பாமல் கடந்துசென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கடவையில் நுழைய முற்பட்ட தருணத்தில், புகையிரதம் வருவதைக் கண்டு உடனடியாக நிறுத்தப்பட்டதால் பேரழிவு தவிர்க்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புகையிரதம் கடந்து சென்ற பின்னரே, கடவைப் பொறுப்பிலிருந்த ஊழியர் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு தனது தவற்றுக்காக மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், முச்சக்கர வண்டிச் சாரதிகளும் சம்பவ இடத்தில் ஒன்றுதிரண்டு தமது கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களின் உயிர்களோடு விளையாடும் வகையில் செயல்பட்ட ஊழியரின் பொறுப்பற்ற செயலைக் கண்டு, சம்பவ இடத்தில் நின்ற முச்சக்கர வண்டிச் சாரதிகள் பலரும் கண்ணீர் மல்க தமது அச்சத்தையும் வேதனையையும் வெளியிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் புகையிரத நிலையத்திற்கும், புகையிரதக் கடவைகளுக்கான பொறுப்பு அதிகாரிகளுக்கும் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கடவையில் உடனடி கவனமெடுத்து, அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவர்களினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பை உடனடியாக உறுதிசெய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.