வவுனியா புளியங்குளம் புதூர் வீதி விபத்தில் தந்தையும் ஒரு வயதுக் குழந்தையும் பரிதாபமாக பலி : தாய் படுகாயம்!!

254

வவுனியா, புளியங்குளம் புதூர் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் அவரது ஒரு வயது நிரம்பாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த தாய் தீவிர சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (09.10.2026) காலை ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து அனந்தர் புளியங்குளம், சமளங்குளம் பகுதியில் அமைந்துள்ள தமது காணியை நோக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களது மோட்டார் சைக்கிள் ஏ9 வீதியின் புதூர் பகுதியை எட்டியபோது, முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளது. இதன்போது எதிரே வந்த மற்றுமொரு வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு புளியங்குளம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு பரிசோதித்த வைத்தியர்கள் தந்தையும் ஒரு வயது நிரம்பாத குழந்தையும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது புளியங்குளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தாய், மேலதிக அவசர சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.