கோர விபத்தில் இளம் காதலி பலி : காதலனின் விபரீத முடிவு!!

158

இரத்தினபுரி பகுதியில் இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். கெட்டஹெத்த, போபத்தையைச் சேர்ந்த 26 வயதான ஹன்சனி செவ்வந்தி என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர் 28 வயதுடைய எஹலியகொட பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் எஹலியகொடையிலிருந்து பரக்கடுவ நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த இளம் பெண் தலைக்கவசம் அணியாமல் இருந்தமையினாலேயே விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை பருவத்திலிருந்து பன்னிரண்டு வருடங்களாக காதல் தொடர்பை பேணிவந்த பெண்ணும் அவரது காதலனும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வாக்குவாதம் செய்துகொண்டே சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்குள்ளான பெண் அந்த இடத்திலிருந்த வாகனம் ஒன்றின் மூலம் எஹலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது காதலி இறந்து விட்டதை அறிந்தவுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய இளைஞர், வீட்டிற்கு சென்று விஷமருந்தியுள்ளார்.

இந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த அந்த இளைஞர் எஹலியகொட அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.