
இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதன்படி சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி ஏமாந்து, இலட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிலரிடமிருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்வதன் மூலம் வெளிநாடுகளுக்கான விசா பெற முடியும் என்றும், சில ஆண்டுகள் பணிபுரிவதற்கான அனுமதியைப் பெற்றுப் பின்னர் குடியுரிமையைக் கூடப் பெற முடியும் என்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் பகிரப்பட்டு வருவதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
இவற்றில் சில விளம்பரங்கள் முற்றிலும் மோசடியானவை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளும்போது கவர்ச்சிகரமான தகவல்கள் வழங்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அப்போது, தாங்கள் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் என அந்த மோசடியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
பதிவுக் கட்டணம் மற்றும் முதலாம் கல்வியாண்டிற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி பல்கலைக்கழகத்தில் இணைய முடியும் என்றும், அதன் பின்னர் பகுதிநேர வேலை தேடிக் கொண்டு தங்குமிடம் மற்றும் உணவிற்கான செலவுகளைச் சமாளித்துக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் கவர்ச்சியாகக் கூறுகின்றனர்.
மேலும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளுக்குக் கல்வி உதவித்தொகை (Scholarship) கூடப் பெற முடியும் என்றும் அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து, மின்னஞ்சல் கோப்பு அல்லது வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இணையத்திலிருந்து திருடப்பட்ட அந்த வீடியோக்களும் படங்களும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மிக நுட்பமாக அவர்களால் முன்வைக்கப்படுகின்றன. மேலும், சேர்க்கைக்காக அவர்கள் அனுப்பும் ஆவணங்களும் உண்மையான பல்கலைக்கழக ஆவணங்களைப்போலவே அச்சிடப்பட்டிருக்கின்றன.
அதன் பின்னர், பணத்தை வைப்பு செய்வதற்காக வெளிநாட்டு வங்கி கணக்கு எண்களை வழங்கி, எந்தவொரு சந்தேகமும் எழாதவாறு சாத்தியமான அனைத்து வழிகளையும் அடைத்து விடுகின்றனர். இவற்றை நம்பி பதிவுக் கட்டணம் மற்றும் முதற்கட்டக் கட்டணமாக இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலுத்திய பிறகு, அந்த மோசடியாளர்கள் தலைமறைவாகி விடுவதாக CERT மையம் தெரிவித்துள்ளது.
எனவே, இணையத்தில் வெளியாகும் இதுபோன்ற விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என்றும், சட்டப்பூர்வமாகச் செயல்படும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளை மட்டுமே தேர்வு செய்யுமாறும் இலங்கை CERT மையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான நபர்கள் வழங்கும் ஆவணங்களின் உண்மைத்தன்மை மற்றும் அவர்கள் வழங்கும் வங்கி கணக்கு எண்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறும் இலங்கை CERT மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





