கொழும்புக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்து முற்றாக தீக்கிரை!!

160

திருகோணமலையில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வருவதற்காகக் கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, ஏ-6 பிரதான வீதியில் திடீரெனத் தீப்பற்றி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்கா பங்குவ பகுதிக்கு அருகில் அமைந்துள்ள 144 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் நேற்று (11.10.2026) அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருகோணமலைக்கு வருகைதரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காகச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும், தீப்பற்றும் விபத்து நிகழ்ந்தபோது பேருந்தில் சாரதியும் அவரது உதவியாளரும் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு வெளியேறியதால் எந்தவிதக் காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

பேருந்து திடீரெனத் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஹபரணை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்