
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் அருகே அதிவேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் 2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பாசேரி பகுதியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்பகுதியில் உள்ள கடையில் தேநீர் குடித்துவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்த 3 பேர் மீது, வேகமாக வந்த மினி கூப்பர் கார் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த கோபிகா (22), தேவிகா (21), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இஜாஸ் (21) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரும் த்ரிக்காக்கரா பகுதியில் படித்து வந்ததுடன், பகுதி நேரப் பணியிலும் ஈடுபட்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காரை ஓட்டியவர் சுஹைல் சஜீவ் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துக்குப் பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார் ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா அல்லது வேறு போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருந்தாரா என்பதைக் கண்டறிய போலீசார் மருத்துவப் பரிசோதனைக்காக மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். காரிலும் தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





