
கேரளாவில் மதுபோதையில் அதிவேகத்தில் சொகுசுக்காரை ஓட்டி 3 பேரை கொன்ற 19 இளைஞர், இந்த வழக்கை என் தந்தை பார்த்துக்கொள்வார் என திமிராக காவல்துறையிடம் பேசியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியின் நெடும்பாசேரி விமான நிலையம் அருகே, நேற்று அதிகாலை சுமார் 1:45 மணியளவில் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார், இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரும், சாலையில் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அந்த கார் இரு சக்கர வாகனத்தை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று நின்றதாகக் கூறப்படுகிறது.
இதில் உயிரிழந்த மூவரும், வயநாடு மடக்கிமலையைச் சேர்ந்த 21 வயதான தேவிகா பாலக்காட்டை சேர்ந்த 22 வயதான கோபிகா, கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 21 வயதான இஜாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மூவரும், தேநீர் அருந்துவதற்காக விமான நிலையப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கோபிகாவும் தேவிகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இஜாஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த காரை ஓட்டி வந்தது 19 வயது கல்லூரி மாணவரான சுஹைல் சஜீவ் என தெரிய வந்துள்ளது.

காவல்துறையின் விசாரணையில், சுஹைல் சஜீவ் மதுபோதையில் மணிக்கு 125 கிமீ வேகத்தில் சொகுசு காரை ஒட்டி வந்தது தெரிய வந்துள்ளது. சுஹைல் சஜீவ் மற்றும் அவரது 3 நண்பர்களும், 9;30 மணி முதல் 1;25 வரை 3 வெவ்வேறு மதுபான கூடங்களில் மது அருந்தியது தெரிய வந்துள்ளது.
மேலும், 3 பேரை கொன்ற குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல், விமான நிலைய சாலையில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதில் என்ன தவறு?, இந்த வழக்கை எனது தந்தை பார்த்துக்கொள்வார் என காவல்துறையிடம் பேசியுள்ளார்.
சஜீவின் தாயார் கொச்சி மற்றும் ஆலப்புழாவில் ஒரு புகழ்பெற்ற வடிவமைப்பு ஸ்டுடியோ மற்றும் பிராண்டை நடத்தி வருகிறார்.
சமீபத்தில், சுஹைல் சஜீவின் பிறந்தநாளுக்கு அவர் இந்த சொகுசு காரை பரிசளித்ததும், அவர் ஏற்கனவே மணிக்கு 220 கிமீ வேகத்தில் காரை ஒட்டியுள்ளதும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சுஹைல் சஜீவை கைது செய்துள்ளனர். காரில் அவருடன் பயணித்த நினவ் என்பவரையும் சம்பவதன்றே கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து மதுபானம் வாங்கிய பில் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உடன் மது அருந்திய 2 கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர்.
கேரளாவில் சட்டபூர்வமாக மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 23 என்பதால், சம்பந்தப்பட்ட மதுபான கூடங்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாநில கலால் துறை அமைச்சர் எம். லிஜு உத்தரவிட்டுள்ளார்.





