2100ஆம் ஆண்டுக்குள் மனித இருப்புக்கே பெரும் அச்சுறுத்தல் : புதிய ஆய்வறிக்கை!!

35

உலகில் நிகழும் அணு ஆயுத மோதல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தீங்கிழைக்கும் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால், 2100ஆம் ஆண்டுக்குள் மனித இனத்தின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என The Lancet மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

அடுத்த 75 ஆண்டுகளில் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் உயிர்வாழ்வுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 17 முக்கிய அச்சுறுத்தல்களை இந்த ஆய்வறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

அவற்றில் காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்றுநோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, வழக்கமான போர்கள், அணு ஆயுத மோதல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தீங்கிழைக்கும் பயன்பாடு ஆகியவை அடங்குகின்றன.

குறிப்பாக, அணு ஆயுத மோதல்களும் செயற்கை நுண்ணறிவின் தீங்கிழைக்கும் பயன்பாடும் மனித இனத்தின் அழிவுக்குக்கூட வழிவகுக்கக்கூடிய அபாயங்களாக இந்த மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இருப்பினும், இத்தகைய பேரழிவுகள் நிச்சயமாக நிகழும் என்று ஆய்வறிக்கை கூறவில்லை. இந்த அச்சுறுத்தல்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், அவற்றைத் தனித்தனியாக அணுகாமல், சுகாதாரம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேசமயம் மனித இனத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, உலக நாடுகளின் அரசுகள் முன்கூட்டியே திட்டமிட்டு, சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன், புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கண்காணித்து, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் விரைவுபடுத்த வேண்டும் என ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.