
புதிய இணைப்பு : அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை சவூதி உயர் நீதிமன்றம் இரத்து செய்தமைக்கு, இலங்கை அரசாங்கம் சவூதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம், சவூதி உயர் நீதிமன்றம் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை இரத்து செய்ததாக இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இன்று (14) அமைச்சு ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அனோஜனின் வழக்கில் சாதகமான முடிவை எட்டுவதற்கான முயற்சிகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை என அமைச்சு விவரித்துள்ளது.
முதலாம் இணைப்பு : அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாகவே இது சாத்தியமானது என அமைச்சர் தெரிவித்தார். அனோஜன் விவகாரத்தில் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இருப்பினும், அவரது தற்போதைய சட்ட நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.





