புதிய வாகனங்களை வாங்க தூண்டப்படும் இலங்கையர்கள் : இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!!

30

இலங்கையில் வாகன இறக்குமதி இயல்பு நிலைக்கு திரும்பும் என இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட்டால், இறக்குமதி வருவாயும் அதிகரிக்கக்கூடும் என்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.., ‘கடந்த ஆண்டு, வாகன இறக்குமதி ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​சந்தையில் புதிய வாகனங்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. ஏனெனில், இலங்கையின் நடுத்தர வர்க்கத்தினரும், புதிய இளைஞர் தலைமுறையினரும் அப்போது தான் வேலை சந்தையில் நுழைந்து நல்ல வருமானம் ஈட்டத்தொடங்கியிருந்தனர்.

அந்த நேரத்தில், அவர்கள் தங்களுக்கென ஒரு வாகனம் வாங்க வேண்டும் என்றும் கனவு கண்டனர். அதனால், நாங்கள் ஐந்து ஆண்டுகளாக இந்த நிலையில் சிக்கிக்கொண்டிருந்தோம்.

எனவே, இந்த வரி விடுவிக்கப்பட்டபோது, ​​பெருமளவிலான வாகனங்கள் நாட்டிற்குள் வந்துள்ளன. தற்போது நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதுடன் தேவைக்கு ஏற்ப வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அரசாங்கம் கூடுதல் வரியை விதித்துள்ளது. அந்த கூடுதல் வரி விதிப்பு வாகன இறக்குமதியில் ஏற்பட்ட சரிவுக்கு ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். அரசாங்கம் இந்த கூடுதல் வரியை நீக்கி சில சலுகைகளை வழங்கினால் வாகன இறக்குமதியை இயல்பு நிலைக்கு திருப்ப முடியும்.

அரசாங்கம் வரிகளை அதிகரித்தாலும், காலப்போக்கில் மக்கள் தங்கள் தேவைகளுக்காக வாங்க தூண்டப்படுவார்கள் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தடையை விதித்தாலும், அது மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். எனவே, நாட்டில் பொருளாதார செயல்முறை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதுடன்,சுங்க வருவாயும் அதிகரித்துள்ளது. ஆகவே, பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதை நாம் காண்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.