
கணவனை கண்டம் துண்டமாக வெட்டி ட்ரம்முக்குள் அடைத்து சிமெண்ட் கலவையை ஊற்றி மறைத்த பெண்ணுக்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியைக் காண்பதற்காக பிரித்தானியாவிலிருந்து ஆசையுடன் ஓடோடி வந்த கணவரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி ஒரு ட்ரம்முக்குள் போட்டு சிமெண்ட் கலவையால் மூடிய பெண்ணை யாரும் எளிதில் மறந்திருக்கமுடியாது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார். தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத், மார்ச் மாதம் 4ஆம் திகதி திடீரென மாயமானார்.
இந்நிலையில், ராஜ்புத்தின் மனைவியான முஸ்கன் ரஸ்தோகியும், அவரது காதலரான சாஹில் ஷுக்லாவுமாக சேர்ந்து ராஜ்புத்தைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு ட்ரம்மில் போட்டு, அதை சிமெண்டால் மூடிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
ரஜ்புத்தைக் காணாமல் அவரது குடும்பத்தினர் அவரைத் தேட, அப்பா ட்ரம்முக்குள் இருக்கிறார் என ராஜ்புத்தின் மகள் கூறியதாகவும், அதைத் தொடர்ந்து பொலிசார் அவரது உடலைக் கண்டுபிடித்ததாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கணவனைக் கொலை செய்த முஸ்கன் ரஸ்தோகிக்கும், அவரது காதலரான சாஹில் ஷுக்லாவுக்கும் புதன்கிழமையன்று மீரட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அத்துடன், அவர்கள் இருவருக்கும் கொலைக் குற்றத்துக்காக ஆளுக்கு 50,000 ரூபாய் அபராதமும், சாட்சியங்களை மறைத்ததற்காக 20,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டதும், அடுத்து என்ன என இருவரும் அதிகாரிகளைக் கேட்க, அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அவர்களிடம் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து மீண்டும் சிறையிலடைக்கப்பட்ட முஸ்கனும் சாஹிலும் உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், முஸ்கனின் பெற்றோர், தங்கள் மருமகனான ராஜ்புத் ஒரு நல்ல மனிதர் என்றும், அவரைக் கொலை செய்த தங்கள் மகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதை எதிர்க்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. முஸ்கன் சிறையிலடைக்கப்பட்டபின், அவரது பெற்றோர் தங்கள் மகளை ஒருமுறை கூட சிறையில் சென்று சந்திக்கவில்லை.





