
குவைத்தின் Ali Sabah Al-Salem மற்றும் Al-Nahda ஆகிய பகுதிகளில் இரு வேறு சம்பவங்களில் இரண்டு இலங்கை பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த 2 சம்பவங்களும் சந்தேகத்திற்கிடமான மரணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது சம்பவத்தில், Ali Sabah Al-Salem பகுதியில் உள்ள வீடொன்றின் கூரைமேலுள்ள சேமிப்பு அறையில் இலங்கை பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குவைத் நாட்டுப் பிரஜை ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 1988ஆம் ஆண்டு பிறந்தவர் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை சந்தேகத்திற்கிடமான மரணமாக பதிவு செய்யுமாறும், சடலத்தை சட்ட மருத்துவ பிரிவிற்கு அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டது. அத்துடன், குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவமாக, Al-Nahda பகுதியில் மற்றுமொரு இலங்கை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு பிறந்த இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் சம்பவத்தின் பின்னணியை உறுதிப்படுத்துவதற்கும் சடலம் சட்ட மருத்துவ பிரவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது சம்பவம் குறித்து பிரஜை ஒருவரிடமிருந்து அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தேவையான சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளவும் விசாரணைகளை நடத்தவும் தடயவியல் நிபுணர்கள், மருத்துவ பரிசோதகர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.





