காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

27

ஐதராபாத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்த காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்ததால், மனமுடைந்த ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அர்ச்சனா (28) என்ற பெண், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அர்ச்சனாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அவருடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விமல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ‘லிவ்-இன்’ முறையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அர்ச்சனா தொடர்ந்து வலியுறுத்தியபோதிலும், விமல் அதற்குச் சரியான பதிலளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அர்ச்சனா, இன்று அதிகாலை 2.30 மணியளவில் விமலுக்கு வீடியோ கால் செய்து, “என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்” எனக் கூறிவிட்டுச் செல்போன் இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் பதறியடித்த விமல் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அர்ச்சனாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அர்ச்சனா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

அர்ச்சனாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாகக் காதலன் விமலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.