புதிய வாக்காளர் பதிவேடு யாழ்ப்பாணம் ஆசனத்தை இழக்க கொழும்பில் அதிகரிப்பு!!

27

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள அதேசம்யம், யாழ்ப்பாண மாவட்டப் பிரதிநிதித்துவம் 6 ஆகக் குறைவடைந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் மாவட்டங்களுக்கிடையிலான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் ஒட்டுமொத்த வாக்காளர் விகிதாசாரம் மற்றும் சனத்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்பின் 98(8) ஆம் உறுப்புரைக்கு அமைவாக இந்த ஆசன நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த புதிய திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ், மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே 19 ஆசனங்களைக் கொண்டிருந்த கம்பஹா மாவட்டத்தின் பிரதிநிதித்துவமும் 19 ஆகவே தொடர்ந்து நீடிக்கின்றது. இதன் மூலம், இலங்கையின் ஒட்டுமொத்த தேர்தல் மாவட்டங்களுக்குள் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களும் தலா 19 நாடாளுமன்ற ஆசனங்களுடன் முதற்தடவையாகச் சமநிலையில் உள்ளன.

அதேநேரம், வாக்காளர் எண்ணிக்கையின் விகிதாசார வீழ்ச்சி காரணமாக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த 7 நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை, புதிய திருத்தங்களின் கீழ் 6 ஆசனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் ஆசன எண்ணிக்கையும் 9 இலிருந்து 8 ஆகக் குறைவடைந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, சான்றளிக்கப்பட்ட புதிய வாக்காளர் பதிவேட்டில் இலங்கையின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,641,006 ஆகப் பதிவாகியுள்ளதுடன், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 90,835 வாக்காளர் அதிகரிப்பாகும்.

இந்த வாக்காளர் பரம்பலின் அடிப்படையிலேயே கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

எனினும், எஞ்சிய 20 தேர்தல் மாவட்டங்களினதும் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனத் தேர்தல் ஆணைக்குழு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இப்புதிய ஆசன ஒதுக்கீட்டு மாற்றங்களானவை, தற்போது நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்தின் ஆசன முறைமையிலோ அல்லது தற்போதைய மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலோ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மாறாக, எதிர்காலத்தில் இலங்கையில் நடத்தப்படவுள்ள பொதுத்தேர்தல்களின் போதே, இந்த புதிய வாக்காளர் பதிவேட்டின் பிரகாரமான ஆசன ஒதுக்கீடுகள் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரும் எனத் தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.