வவுனியாவில் PickMe முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் : நால்வர் கைது!!

643

வவுனியா கணேசபுரம் பகுதியில் PickMe செயலி ஊடாக முச்சக்கரவண்டியை முன்பதிவு செய்து, சாரதியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வர் பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் சமரசத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு கணேசபுரம் பகுதியில் வைத்து PickMe செயலி மூலமாக முச்சக்கர வண்டி ஒன்று முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த முச்சக்கரவண்டி சாரதியுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாங்கள் நால்வர் ஒரே முச்சக்கர வண்டியில் பயணிக்க வேண்டும் என பயணிகள் வற்புறுத்தியபோதிலும், விதிமுறைகளின்படி மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என சாரதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், முச்சக்கர வண்டி சாரதி மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று இரவு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், இன்றையதினம் காலை பாதிக்கப்பட்ட சாரதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் சுமார் 20க்கு மேற்பட்ட PickMe முச்சக்கர வண்டி சாரதிகள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடினர்.

இதன்போது தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திய சாரதிகள், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட நெளுக்குளம் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸார் எச்சரித்து விடுவித்தனர்.
எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடக் கூடாது என நால்வருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக PickMe செயலி மூலம் வாகனங்களை முன்பதிவு செய்து, சாரதிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பது மற்றும் இடையூறுகளை ஏற்படுத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

PickMe செயலி மூலம் நேர்மையான முறையில் தொழில் செய்து வருமானம் ஈட்டி வரும் சாரதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பலரும் எச்சரித்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.