
குறிப்பிட்ட சில சேவைகளுக்காக வரி செலுத்துபவர் அடையாள இலக்கத்தை (TIN இலக்கம்) கட்டாயமாக்கும் நடைமுறை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நடைமுறையை எதிர்வரும் 2027 ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை 2026 நவம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், பொதுமக்களிடையே TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் அனுமதியுடன் இந்த ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளவர்கள் தமது சான்றிதழ்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள மாற்று வசதிகளை அறிமுகப்படுத்தவும் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் இணையவழி ஊடாகப் பதிவு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த நடைமுறை இரத்துச் செய்யப்படவில்லை என்றும், எதிர்வரும் 2027 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் கட்டாயமாக நடமுறைக்கு வரும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.





