
எதிர்வரும் நவம்பர் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டலத் தளம்பல், குறைந்த காற்றழுத்தப் பிரதேசமாக உருவெடுத்து, பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலைத் தொகுதியின் தாக்கம் எதிர்வரும் நவம்பர் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் இலங்கையைப் பாதிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடுவதற்குப் போதுமான தரவுகள் தற்போது கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையேற்படின் உரிய எச்சரிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்குக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்தால் இலங்கை கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கைசுற்றுலா வழிகாட்டி இதேவேளை, இன்று (10) காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம் என்பதால் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





