சுற்றுலா விடுதியில் யுவதி கொலை : கைவிலங்குடன் தப்பிய காதலன்!!

15

நுவரெலியா – மாகஸ்தோட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் 27 வயதுடைய யுவதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸ் காவலில் இருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்று மீண்டும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி மாகஸ்தோட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் 27 வயதுடைய யுவதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான அவரது காதலன், தேரிப்பஹா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்திருந்த நிலையில், பொலிஸ் காவலில் இருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்றிருந்தார்.

தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர், கடந்த 12 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் கைவிலங்குடன், மதுபோதையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நஞ்சுப் போத்தல் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தேரிப்பஹா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர், ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (13) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.