பூஜையில் படைக்கும் முன் பிரசாதத்தை சாப்பிட்ட குழந்தையை அடித்தே கொன்ற தாய்!!

25

பீகாரில் சத் பூஜைக்காக தயார் செய்யப்பட்டிருந்த பிரசாதத்தை சாப்பிட்ட 4 வயது குழந்தையை, குழந்தையின் தாய் அடித்து கொன்றுள்ளார். பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள முகமதுபூர் பிரௌலி கிராமத்தை சேர்ந்த ரீனா குமாரி சத் பூஜைக்காக பிரசாதம் தயாரித்துக் கொண்டிருந்தார்.

குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய வெளியே சென்றிருந்தனர். அப்போது, ரீனா குமாரியின் 4 வயது மகளான சுஹானி குமாரி, சாமிக்கு படைக்க தயார் செய்யப்பட்டிருந்த பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் அது படைக்க தகுதியற்றதாக கருதிய தாய், ஆத்திரத்தில் குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு பின்னர் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், ரீனா குழந்தையை சிகிச்சைக்காக ஒரு தனியார் நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சமஸ்திபூரில் உள்ள சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாய் ரீனா குமாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜு பஸ்வான், ரீனா குமாரி தம்பதிக்கு 7 வயதான ஷிவானி குமாரி, 4 வயதான சுஹானி குமாரி மற்றும் ஒன்றரை வயதான ராஜா குமார் என 3 குழந்தைகள் உள்ளனர்.

சுஹானியின் மரணத்தால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், தனது மனைவிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், அவள் என் வாழ்க்கையில் தேவை இல்லை. என் குழந்தைகளை நானே வளர்த்துக்கொள்வேன் என ராஜு பஸ்வான் தெரிவித்துள்ளார்.