தம்பியை தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட அண்ணன் : அமெரிக்காவில் இந்தியர் உயிரிழப்பு!!

16

அமெரிக்காவில், வாகனத்தில் இருந்த தம்பியை தவறுதலாக அண்ணன் துப்பாக்கியால் சுட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இருவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நியூயார்க்கின் ஹிக்ஸ்வில் பகுதியில் நவம்பர் 14 அன்று அதிகாலை 12.01 மணிக்கு யோங்கர்ஸைச் சேர்ந்த 24 வயதான முகமது இப்ராஹிம் அகமது வாகனத்தில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகநாசாவ் கவுண்டி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

வாகனத்தின் உள்ளே காயங்களுடன் இருந்த இப்ராஹிமை காவல்துறையினர் கண்டறிந்து, அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

காவல்துறை அறிக்கையின்படி, முகமது இப்ராஹிமின் மூத்த சகோதரரான 27 வயது முகமது பஷீர் அகமது, வாகனத்தில் இருந்தபோது தவறுதலாக தனது கைத்துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வயது முகமது பஷீர் அகமது கைது செய்யப்பட்டு, அவர் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றமற்ற மரணம் விளைவித்தல் மற்றும் இரண்டாம் நிலை ஆயுதங்கள் வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டுகளை மறுத்த முகமது பஷீர் அகமது, தான் குற்றமற்றவர் என வாதிட்டார். அவரைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த விசாரணை நவம்பர் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது.

சகோதரர்கள் இருவரும் இந்தியாவின் ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவார்கள். இப்ராஹிம் லாங் ஐலண்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அவர்களது பெற்றோர்கள், அமெரிக்கா வர விரும்பும் நிலையில், அதற்கு நிதி திரட்டும் முயற்சியில் அவரது உறவினர்கள் இறங்கியுள்ளனர்.