
பதுளை மாவட்டம், ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவரை 6ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உறவினர் வீட்டில் இடம்பெற்ற குடும்ப நிகழ்வொன்றில் பங்கேற்க சென்ற ஹப்புத்தளை, கஹகொல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
உடுவரை 6ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமிற்கு அருகிலுள்ள உறவினர் வீட்டில் இடம்பெற்ற குடும்ப நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக குறித்த இளைஞர் வருகை தந்துள்ளார்.
இதன்போது, உறவினர்களுடன் இணைந்து அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற அவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் ஹாலி-எல பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாகப் பதுளை மாவட்டத்தில் நிலவும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றுப் படுகைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு, பல இடங்களில் ஆழமான குழிகளும் உருவாகியுள்ளன. இதனால், பொதுமக்கள் வழக்கமாகப் பாதுகாப்பாக நீராடும் இடங்களில்கூட நீரின் ஆழம் அதிகரித்திருப்பதுடன், நீரோட்டத்தின் வேகமும் அபாயகரமாகக் காணப்படுகிறது.
எனவே, இயற்கை நீர்நிலைகளில் நீராடச் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், நீர்நிலைகளின் தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் நீரில் இறங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






