மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மர்ம பொதிக்குள் சிக்கிய பொருள்!!

6

பேலியகொடையில் சுங்க களஞ்சியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 18.19 கோடி ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரும் குறித்த சுங்கக் களஞ்சியசாலையில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகளும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 3 பொதிகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது இந்தச் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அடையாளம் காணப்பட்டது.

அத்துடன், குறித்த பொதிகளைப் பொறுப்பேற்க வரும் நபர்களைக் கைது செய்யும் நோக்கில் அவற்றைத் தடுத்து வைப்பதற்கு சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எவரும் அப்பொதிகளை பொறுப்பேற்க வராத காரணத்தினால், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் முன்னிலையில் அப்பொதிகளைத் திறந்து சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.193 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட சுங்க விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.