திருப்பதிக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய சென்னை தொழிலதிபர் : யார் இவர்?

4

சென்னையை சேர்ந்த தொழிலதிபரான வர்தமான் ஜெயின், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கியுள்ளார். ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் போது, பணம், தங்கம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான வர்தமான் ஜெயின், இன்று திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

பலத்த காவல்துறை பாதுகாப்புடன் 9 பெட்டிகளில் திருமலைக்குக் கொண்டுவரப்பட்ட தங்க ஆபரணங்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த தங்க நகை ஆபரணங்கள், கிரீடம், சங்கு, சக்கரம், தோள், கை பாதங்களுக்கு அணிவிக்கும் அதாவது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அலங்கரிக்கும் 9 தொகுப்புகளாக 45 வகையான நகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சென்னையை சேர்ந்த வர்தமான் ஜெயின், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் புள்ளியியல் பயின்ற பிறகு, அமெரிக்காவில் உள்ள ஆஸ்டின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக அங்கு சென்றார்.

Dell நிறுவனத்தின் BPO மேலாண்மை பிரிவு இயக்குநராக பணியாற்றிய அவர், விஷன் ஹெல்த் சோர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் ஆசியா இன்ஜினியரிங் நிறுவனத்தின் இணை உரிமையாளர் மற்றும் இயக்குநர் ஆவார். மேலும், படச் செயலாக்கம் மற்றும் மருத்துவக் குறியீடாக்கம் தொடர்பான பல காப்புரிமைகளையும் அவர் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு அவரது நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை ரூ 18,524 கோடிக்கு விற்பனை செய்தார். அந்த வருமானத்தில் இந்த காணிக்கையை வழங்கியுள்ளார். காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.150 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

வர்தமான் ஜெயின், காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். மேலும், ஸ்ரீ சரிதா ஜெயின் அறக்கட்டளை மூலம், அவர் கல்வி, பசி நிவாரணம் மற்றும் அவசரகால மருத்துவ சேவைகளை ஆதரிக்கிறார். பின்தங்கிய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சியான ‘ஆவிஷ்கார்’ அமைப்பை நிறுவியுள்ளார்.

இவர் திருப்பதிக்கு நன்கொடை வழங்குவது இது முதல்முறை இல்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் இயக்கப்படும் பக்தி தொலைக்காட்சி சேனலான ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனலின் மேம்பாட்டிற்காக ஜெயின் ரூ. 7 கோடி வழங்கியுள்ளார்.

கால்நடைப் பராமரிப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில், தேவஸ்தான கோசாலையில் ரூ.5 கோடி மதிப்பிலான தீவனக் கலவை ஆலையை நிறுவினார்.

பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் நாணயங்களைப் பிரித்து எண்ணுவதற்கு கோயில் நிர்வாகத்திற்கு உதவும் வகையில் ரூ.1 கோடி மதிப்பிலான நாணயம் எண்ணும் இயந்திரத்தை வழங்கினார்.

கடந்த மே மாதத்தில், TTDயின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மின்சாரப் பேருந்துகளையும் வழங்கியுள்ளார்.