ருமேனியாவில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த இலங்கையர் : தீவிர சிகிச்சையில் மற்றுமொருவர்!!

23

ருமேனியாவின் இல்ஃபோவ் (Ilfov) மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம், மாதம்பே, செம்பு கட்டா பகுதியை சேர்ந்த 46 வயதுடைய துசிதா சரங்கா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குழாய் பதிப்பதற்காக சுமார் பதினான்கு அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த குழியில் வேலை செய்து கொண்டிருந்த போது துசிதாவும், கேகாலை பகுதியை சேர்ந்த சம்பத் என்ற மற்றொரு இலங்கையரும், திடீரென பெரிய மண் மேட்டின் அடியில் புதைந்துள்ளனர்.

இதன்போது சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பெரும் முயற்சிக்கு பிறகு, நாட்டின் மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் புதைந்திருந்த இருவரையும் வெளியே எடுத்துள்ளனர்.

இருப்பினும், துசிதா மீட்கப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், விபத்தில் படுகாயமடைந்த சம்பத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலைக்காக ருமேனியா சென்ற துசிதா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குறுகிய விடுமுறையில் இலங்கை திரும்பி, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவழித்து, மீண்டும் வெளிநாடு சென்ற நிலையில் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எதிர்காலம் குறித்த பல நம்பிக்கைகளுடன் வெளிநாடு சென்ற துசிதா சாரங்கவின் உடல், இறுதிச் சடங்குகளுக்காக டிசம்பர் முதலாம் திகதியன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளது.