நவராத்திரி விரதமும் சக்தி வழிபாட்டின் சிறப்பும்!!

8444


Navarathiri

இந்துக்களிடையே சக்தி வழிபாடு மிகவும் மேலான இடத்தினை பெறுகின்றது. இச்சக்தி வழிபாட்டிலே நவராத்திரி விரதம் மிகச் சிறப்பு மிக்கது. இந்தவகையில் நவராத்திரி விரதமானது புரட்டாதி மாத வளர்பிறை முதல் ஒன்பது தினங்களும் நோற்கப்படும். இவ்வொன்பது தினங்களிலே முதல் மூன்று தினங்களும் துர்க்கைக்காகவும், அடுத்த மூன்று தினங்களும் இலக்குமிக்காகவும், இறுதி மூன்று தினங்களும் சரஸ்வதிக்காகவும் அனுஷ்டிக்கப்படுதல் மரபு, இவ்வழிபாட்டின் மூலம் வீரம், செல்வம், கல்வி என்னும் பேறுகள் கிடைக்கும் என்பது விரதம் நோற்போரின் நம்பிக்கையாகும்.



இவ்விரதத்தின் நியதிகளாக பிரதமைத் திரியில் கும்பம் வைத்து பூசை தொடக்கப்படல், வீடுகளில் கொலு வைத்தல், ஸ்ரீசக்கர மகாயந்திர பூசை செய்தல், சண்டி ஹோமம் வளர்த்தல், தேவி மாகத்மியம், வலிதா சகஸ்ர நாமம் அபிரமி அந்தாசி, சகலகலா வல்லி மாலை போன்ற சக்தி நூல்களைப் பாராயணம் செய்தும் கூட்டுப்பிரார்த்தனை செய்தலும் இடம்பெறும்.

நவராத்திரியை அடுத்து வருகிற 10ம் நாள் விஜய தசமியன்று ஏடு தொடங்கல், புதிதாக கலைப்பயிற்சி தெடங்குதல் என்னும் நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நிறைவேற்றப்படும் ஆலயங்களில் அன்று மடொசுர ரங்காரம் விசேட அம்சமாக நிகழும். நிகழும் இந்த நவராத்திரி காலங்களில் பாடசாலைகள், ஏனைய கல்வி நிலையங்கள், அரச நிறுவனங்களில் நவராத்திரிப் பூசைகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.



இத்தகைய நவராத்திரி விரதத்திற்குரிய சக்தி வழிபாட்டின் சிறப்புப் பற்றி நோக்கும் போது சக்தியை முழு முதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சாக்தீ சமயமாகும். தற்போது தனியான ஒரு சமயமாக இருந்தாலும் ஆரம்பத்தில் சைவசமயத்தோடு தொடர்பைக் கொண்டிருந்தது. “சக்தி பின்னமிலா எங்கள் பிரான்” என்னும் பாடலடி எத்திற நின்றான் ஈசன் அத்திறன் அவளும் நிப்பாள் என்னும் பாடலடி அர்த்தனார் ஈஸ்வரவடிவம் உமாமகேஷ்வடிவம் ஆகியவை சிவனும் சக்த்தியும் இணைந்து நிற்கும் நிலையை சுட்டிக்காட்டுகின்றன. இவை சைவ சாக்த சமயத் தொடர்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.



சக்தி வழிபாட்டின் தோற்றம் பற்றி நோக்கும் போது உலகம் என்று படைக்கப்பட்டதோ அன்றிலிருந்து சக்தி வழிபாடும் காணப்பட்டதாக கருதுகின்றனர். ஆயினும் சிந்துவெளிக் காலத்தில் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழான பெண்ணின் முத்திரை சக்தி வழிபாட்டையும், உலகப்படைப்புக்குரிய முதற்காரணமாக சக்தி விளங்குகிறாள் என்பதை குறித்து நிற்குறது. எனவே சக்தி வழிபாட்டின் தோற்றம் சிந்துவெளியில் நிகழ்ந்தது எனக்குறிப்பிடலாம்.


சக்தி வழிபாட்டின் வரலாற்றை நோக்கும் போது வேத காலத்திலே ‘உஷை‘ எனும் தெய்வம் சக்தி வழிபாட்டிற்குரிய தெய்வமாக இருப்பதைக் காண்கின்றோம். இயற்கையோடு தொடர்பான பூமி போன்றனவும் சாக்த தெய்வமாக இருந்தன. புராண காலத்திலே மார்க்கண்டேய புராணம் துர்க்கை மகிடன் என்னும் அசுரனை அழித்த கதையைக் கூறுகின்றது. அது மட்டுமன்றி புராணங்களிலே சக்தியின் பல பெயர்களைச் சொல்லி வழிபாடு செய்யும் “லலிதா சகஸ்ர நாம வழிபாடு, இடம் பெறுவதையும் காணலாம். இதிகாசங்களிலே மகாபாரதத்திலே துர்க்கா தோத்திரம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இதுவும் சக்திக்குரிய பல நாமங்களை குறிப்பிடுகின்றது எனலாம். உப நிடதங்களிலும் தேவி உபநிடதம் என்பது தேவியின் பெருமையைப் பற்றிச் சிறப்பாக எடுத்துக்கூறுகின்றது. குப்தர் காலத்திலே ‘காளிதாசர்’ சிறந்த காளி பக்தராக விளங்கியதாகவும் பிறவியிலே ஊமையான இவருக்கு காளி தனது சூலத்தினால் (காளிதாசரின்) நாவில் குத்தி பேசும் வல்லமை கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.


இக்காலத்தில் சங்கரரும் சிறந்த காளி பக்தராக இருந்ததாக இவரது ‘செளந்தர்யலகரி’ கூறுகின்றது. இந்நூல் சக்தி வழிபாட்டின் சிறப்பைச் சிறப்பாக எடுத்துக்கூறுகின்றது. குப்த கால நாணயங்களில் காளியின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தமை இக்காலத்தில் சக்தி வழிபாட்டின் உயர் நிலையைக் காட்டுகின்றது.

தமிழ் நாட்டில் சக்தி வழிபாடு பற்றி நோக்கும் போது சங்ககாலத்திலும், சங்கமருவிய காலத்திலும் கொற்றவை வழிபாடு என சக்தி வழிபாடு இடம்பெற்றமை குறிப்பிடப்பட்டது. பாலை நிலத்தெய்வமாகிய கொற்றவை பிரிவுத்துயரை நீக்கும் தெய்வமாக வழிபடப்பட்டதை காண்கிறோம். அத்தோடு முருகனைப் பற்றிக் கூறும் போது சங்ககாலப் பாடல்கள் ‘கொற்றவையின் புதல்வர்’ என்று கூறுகின்றது.

பல்லவர் காலத்திலே கோயிற் சுவர்களில் துர்க்கை மகுடன் என்னும் அசுரணை அழிக்கும் கதை சிற்பமாக தீட்டப்பட்டுள்ளது. சோழர் காலத்திலே சக்தி வழிபாடு விக்கிரகங்களிலே நடைபெற்றது என்பதை அங்கு கண்டுபிடிக்கப்பட்ட விக்கிரகங்கள் கூறுகின்றன. சோழர் காலத்திலே கம்பர் ‘சரஸ்வதி தோத்திரம்’ என்னும் நூலை எழுதி சக்தி வழிபாட்டுக்கு உதவினார்.

நாயக்கர் காலத்திலே குமரகுருபரர், அபிராமிப்பட்டர் முதலியோர் சிறந்த சாக்த சமயத்தவர்களாக இருந்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.


19ம் நூற்றாண்டிலே பாரதியார், ராமகிருஷ்ண பரமகம்சர் போன்றோர்கள் சக்தி வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சக்தி வழிபாடு கண்ணகை என்றும், முத்துமாரி என்றும், வடபத்திர காளி என்றும் பல்வேறு நாமங்களில் வழிபடப்படுகின்றது.

இனி சக்தி வழிபாட்டு முறைகளை நோக்கும் போது இது இரண்டு வகைப்பட்டதாக அமைந்துள்ளது. 1. வாம மார்க்கம். இது வட இந்திய மரபில் வழிபாடு செய்வதைக் குறிக்கும். 2. தட்சன மார்க்கம் – இது தென் இந்திய திராவிட மரபிலே வழிபாடு செய்வதைக் குறிக்கும். தட்சண மார்க்கம் என்பது ஆகம விதியை தழுவாது பக்தி நெறியில் வழிபாடு இடம்பெறுவதைக் குறிக்கும்.

சக்தி வழிபாடுகள் மந்திரம், தந்திரம், யந்திரம் என்னும் மூன்று வகையிலும் இடம்பெறுவதைக் காண்கின்றோம். இந்திரம் என்பது சக்தியின் நாமங்களை உச்சரித்து வழிபாடு செய்வதைக் குறிக்கும். தந்திர வழிபாடு என்பது ஆகமம் கூறுகின்ற முறைமைக்கமைய கோயில்களிலே விக்கிரகங்களில் வழிபடும் முறைமையை குறிக்கும். யந்திரம் என்பது அரிசி மா அல்லது மஞ்சள் மா என்பவற்றினால் யந்திரம் அமைத்து அந்த யந்திரத்திலே சக்தி வீற்றிருக்கிறாள் என நினைத்து வழிபடல் இது ஸ்ரீ சக்கர பூசை வழிபாடு எனவும் கூறப்படும்.

இலங்கையில் முன்னேஸ்வரத்திலே இவ்வழிபாடு இடம்பெறுகிறது. இவ்வாறு வழிபடும் போது வெவ்வேறு பெயர்களையும், உச்சரிப்பதையும் காணலாம். சர்வ மந்திரரூபிகா சர்வயந்திர ஆத்மிகா சர்தந்திரரூபா எனப்

தமிழ் நாட்டில் சக்தி பீடங்களிலே சுமங்கலி பூசை, சுவாஜினி பூசையென வெவ்வேறு வழிபாடு இடம்பெறுகின்றது. பெண்கள் நித்திய சுமங்கலிகளாக இருப்பதற்கு இந்த வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

ஸ்ரீ வித்தியா உபாசனை வழிபாடு சக்தியின் பல்வேறு நாமங்களைச் சொல்லி உபாசனை செய்தல் ஸ்ரீ வித்தியா உபாசனை எனப்படும். ஸ்ரீ வித்தியா உபாசனை என்பது இவ்வுலகப் படைப்புக்கு சக்தியே மேலானவள் எனும் கருத்தைத் தருகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையிலே சக்தி பீடங்களிலே சக்தியின் 1008 நாமங்களை உச்சரித்து வழிபாடு செய்தல் இதனோடு தொடர்புடையது.

மேற்கூறிய வழிபாடுகளை விட உருவ வர்ணனையில் வழிபடல், தச நவராத்திரியில் வழிபடல், முதலிய வழிபாடுகளும் உண்டு.

இனி சக்தி விழாக்களும், விரதங்களும் பற்றி நோக்கும் போது மேற்கூறியது போன்று நவராத்திரி விரதம், கேதாரகெளரி விரதம் போன்றன சிறப்பு மிக்கவை. சக்தி (துர்க்கை) மகிடன் என்னும் அசுரனை அழித்த நிகழ்வை நினைவுபடுத்துகின்றது. நிவராத்திரி விரதமாகும். இது 10 ஆவது நாள் ஆயுத பூசை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தொழிலாளனும் கலைஞனும் தமது தொழில் கருவிகளை வைத்து வழிபடல் ஆயுதபூசையாகும். இதன் இறுதியில் துர்க்கை மகுடன் என்னும் அசுரனை அழித்த கதை கூறும். ‘மானம்பூ திருவிழா’ இடம்பெறும். இந்த விழா வட இத்திய வங்காள நாட்டிலே ‘தசரா’ எனப்படுகிறது.

சக்தியின் விரதங்களில் மற்றையது கேதாரகெளரி விரதமாகும். இந்த விரதத்தை சக்தியே அனுஷ்டித்ததாக வரலாறு கூறுகின்றது. சக்தி வழிபாட்டுடன் தொடர்புடைய இலக்கியங்களிலே சாக்த ஆகமம் முக்கியமானது. அவை 77 ஆகும். இதிலே மகா நிர்வான தந்திரம், சூலசூடாமணி, காமலகலா விலாசம், ஞானாவர்ணம், பிரபஞ்ச சாரம், திரிபுர இரகசியம் ஆகியன அடங்கும். இதனை தந்தியங்கள் என்றும் கூறுவர்.

சங்கரர் பாடிய ‘செளந்தர்யலகரி, இது சக்தியின் அழகுப்பொலிவை மாலையாக எடுத்துக் கூறுகின்றது. அபிராமி அந்தாதி, துர்க்கை தோத்திரம், தேவிபாகவம், சகலகலாவல்லி மாலை, தேவி உபநிடதம், பராபரக்கண்ணி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் ஆகியன பிரதானமானவை.

சக்தி வழிபாட்டால் மேன்மை, பெற்ற பக்தர்களாக கம்பர், அபிராமிப்பட்டர், மூகர், இராமகிருஷ்ணர், காளிதாசர், சங்கரர், பாரதியார் போன்றோர் சிறப்பாக காட்டப்படுகின்றனர். சக்தியின் பெருமை கூறும் ‘தனம் தரும் கல்வி தரும்…..’ ‘சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்…..’ என்னும் பாடல்கள் சக்தியே முழுமுதற் கடவுள் என்பதை பறை சாற்றுகின்றன.

சக்தி வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற ஆலயங்களாக காசிவிசாலாட்சி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, புதுக்கோட்டை புவனேஸ்வரி, போன்ற ஆலயங்கள் இந்தியாவில் உள்ளன. இலங்கையிலே மாத்தளை முத்துமாரி அம்மன், நயினை நாகபூஷணி அம்மன், தெல்லிப்பளை துர்க்கையம்மன், செட்டிபாளையம் கண்ணகை அம்மன், ஆகிய ஆலயங்கள் பிரசித்தி வாய்ந்தவை.

சக்தியை சரஸ்வதி, துர்க்கை, ஆதிபராசக்தி, வைஷ்ணவி, ருத்திராமணி, மனோன்மணி, சண்டிகா, சாமுண்டி, புவனேஸ்வரி, மூதாம்பிகை, அன்னபூரணி, திரிபுர சுந்தரி, மதுசாவர்த்தினி, மீனாட்சி, அம்பிகா, அபிராமி, என பல நாமங்களை கொண்டு வழிபட்டு பயன்பெறுவர்.

இவ்வாறு இந்துக்களின் மரபிலே நவராத்திரி விரதமும் அதனுடன் தொடர்புடைய ‘சக்தி வழிபாடும்’ சிறப்புப் பெறுவதனைக் காண்கின்றோம்.