கடந்த 2008ஆம் ஆண்டு புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள திரு சொக்கலிங்கம் அவர்களின் இல்லத்திலே; ஆரம்பித்து வைக்கப்பட்டு பிள்ளைகளுக்கு சிறந்த கல்விச் சேவையினை ஆற்றிவந்த “சொக்கலிங்கம் அக்கடமி” என்கிற சொக்கலிங்கம் இலவசக் கல்வி நிலையமானது, காலப்போக்கிலே ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலைகள் மற்றும் இடம்பெயர்வுகள் உள்ளிட்ட காரணங்களினால் சிறிதுசிறிதாக கைவிடப்பட்டு, விரல் விட்டு எண்ணக்கூடியளவு பிள்ளைகள் மாத்திரமே கல்விகற்று வரும் நிலையில் இருந்தது.
இந்நிலையில், அண்மையில் சொக்கலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் இது தொடர்பாக ஆராய்ந்து, ஆலோசனைகளை மேற்கொண்டதன் பின்னர் 10.09.2014 புதன்கிழமை அன்று மீண்டும் இந்த இலவசக் கல்வி நிலையத்தை சிறப்பாக ஆரம்பித்து வைத்துள்ளனர். புங்குடுதீவு தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள் இந்த அக்கடமியினை வைபவரீதியாக கடந்த 10.09.2014 புதன்கிழமை அன்று மீண்டும் ஆரம்பித்து வைத்தார்.
தற்போது சொக்கலிங்கம் அக்கடமியானது பல பிள்ளைகளை உள்வாங்கியுள்ளது. இங்கு தற்பொழுது செல்வி காஞ்சனா றோஸஸ் அவர்களும், திருமதி ரூபிகா திலீப்குமார் அவர்களும் ஆசிரியைகளாக பணியாற்றி வருகின்றனர்.
தற்போது திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த இலவச கல்வி நிலையம் இயங்கி வருகின்றது. இந்த கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட போது (கடந்த மாதம்) 23 பிள்ளைகளாக இருந்த நிலையில் தற்போது இக்கல்வி நிலையத்திற்கு 45பிள்ளைகள் வரையில் கல்வி கற்பதற்காக வருகை தருவதுடன், அதற்கான ஒழுங்குபடுத்தல்களும் உரியவகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்படி “சொக்கலிங்கம் அகாடமி” என்கிற இந்த இலவச கல்வி நிலையத்தின் சார்பில், உலக சிறுவர் தினத்தினையும், தற்போது நடைபெற்று வரும் நவராத்திரி விழாவினையும் முன்னிட்டு எதிர்வரும் 04.10.2014 சனிக்கிழமை அன்று “புங்குடுதீவு ஜே-26 கிராமப் பிரிவுக்கான சிறுவர் கழகத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு மைதானத்தில் கலை நிகழ்வுகளும், விளையாட்டுப் போட்டியும், சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கலை நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக புங்குடுதீவு தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். “ஜெசாட்” நிறுவன பணிப்பாளர் திரு.அபராஜ் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திருமதி.சவரிமுத்து மரியகொரட்டி (மாதர் சங்கத் தலைவி) திரு.இ.டானியல் (புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி சங்கத் தலைவர்) திருமதி.கேசவராஜ யசிகலா (புங்குடுதீவு ஜே.25 பிரிவின் சிறுவர் கழக விளையாட்டுப் பொறுப்பாசிரியர்) உட்பட பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன், செல்வி மேக்டலின் டயானா, திருமதி நடராஜா சத்தியதேவி, திருமதி சுலோசனா தனம் ஆகியோர் நடுவர்களாக கடமையாற்றவுள்ளதுடன்,
விளையாட்டுப் போட்டி மற்றும் கலை, கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்று அந்நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அறியத் தந்துள்ளனர்.
எனவே, இதுபோன்ற நல்லதொரு நிகழ்ச்சியினையும், விளையாட்டுப் போட்டியினையும் நடாத்துகின்றமைக்கு புங்குடுதீவு சொக்கலிங்கம் இலவச கல்வி நிலையத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்
இவ்வண்ணம்..
திருமதி. தனபாலன் சுலோசனாம்பிகை
புங்குடுதீவு.