சம்பியன் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய சென்னை சூப்பர்கிங்ஸ்!!

436

சம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ரெய்னாவின் அதிரடி சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்தியாவில் நடைபெற்று வந்த 6வது சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் உத்தப்பா, கம்பீர் இருவரும் பொறுப்புடன் ஆடி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் சென்னை பந்து வீச்சாளர்கள் திணறினர்.

அணியின் ஓட்டங்கள் 91ஐ தொட்டபோது உத்தப்பாவை ஆட்டமிழக்க செய்தனர். 32 பந்துகளை எதிர்கொண்ட உத்தப்பா 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 39 ஓட்டங்கள் சேர்த்தார்.

அடுத்து களமிறங்கிய கலிஸ் ஒரு ஓட்டத்தில் வெளியேறியபோதும், மறுமுனையில் அரை சதம் கடந்து அதிரடியாக ஆடிய கம்பீர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அவர் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 80 ஓட்டங்கள் எடுத்தபோது, ஜடேஜா பந்தில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் கம்பீர் பாணியில் 18வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்ட மணீஷ் பாண்டே 32 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

டஸ்சாட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் யூசுப் பதான் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என பந்துகளை பறக்க விட்டார்.
இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் சேர்த்தது.

பதான் 20 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார், சென்னை தரப்பில் நேகி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 181 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.

சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 62 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் சதம் கடந்து 109 ஓட்டங்கள் விளாசினார். மெக்கல்லம் 39 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.

5 விக்கெட் வீழ்த்திய நேகி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
கிண்ணம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த ரெய்னா தொடர்நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

csk_kkr_012 csk_kkr_013 csk_kkr_015