உலகத்தின் வளர்ச்சிப்போக்கையும் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தையும் வாழ்க்கையின் சவால்களிற்கு முகம் கொடுக்கும் ஆற்றலினையும் தீர்மானிக்கின்ற மனிதவளங்களின் சிற்பிகளான ஆசிரியர்கள் ஒவ்வொரு தனிமனிதன் வாழ்விலும் மறக்கமுடியாத நட்சத்திரங்கள்.
அவ்வாறான உலகத்தின் உன்னதமான படைப்பாளிகளை இன்றைய நாளில் வாழ்த்துவதுடன் நன்றியுடன் கௌரவப்படுத்துவோம் என்று ஆசிரியர் தினம் தொடர்பான வாழ்த்துச் செய்தியிலே சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகளில் ஒக்டோபர் 05, பதினொன்றிற்கு மேற்பட்ட நாடுகளில் பெப்ரவரி 28, இலங்கையில் ஒக்டோபர் 06 என உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
எனினும் இனம், மதம், மொழி, நாடு என்ற வேற்றுமைகளை கடந்து பாரபட்சமற்ற முறையில் அர்ப்பணிப்புடனும் தியாக சிந்தனையுடனும் பணியாற்றக்கூடிய தன்னலமற்றவர்கள் ஆசிரியர்கள். இந்த மகத்தான தொழிலினை பணி என்று மட்டும் கருதக்கூடாது. அது வாழ்வியல் நெறிமுறைகளுடன் இரண்டறக்கலந்த தெய்வீக கடைமை. அறிவு, ஒழுக்கம், விழுமியங்கள், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொதுஅறிவு, விளையாட்டு என வாழ்வதற்கான அனைத்து விடயங்களையும் பயிற்றுவிக்கின்ற அற்புதமானகலையாகும்.
இக்கலையினை பல்வேறு பொருளாதார, அரசியல் நெருக்கடிக்களைத் தாண்டி நல்சிந்தனையுடன் பணியாற்றுகின்ற ஆசிரியர்களால்தான் இன்றும் இலங்கையின் கல்வியறிவு அபிவிருத்தி கண்டு வருவதுடன் அறிவுத்திறனில் சாதுரியமும் விவேகமும் உள்ள சமூகம் தோற்றம் பெற்று வருகிறது.
குறிப்பாக வன்னி மாவட்ட ஆசிரியர்களை ப் பொறுத்தவரை போக்குவரத்து மற்றும் அடிப்படைவசதிகள், விடுதி வசதிகள் சீராக இல்லாத சந்தர்ப்பத்திலும் கடமையை கண்ணாக நினைத்து பணியாற்றுவதை யாரும்புறம் தள்ளி விடமுடியாது.
பாரம்பரிய குருகுல கல்வி முறை மாற்றமடைந்து மனித உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாலும் மாணவர்களின் வெற்றிகளில் இன்பங்காணும் நாம் அதன் பின்னால் மறைந்திருக்கும் ஆசிரியர்களின் தீவிர உழைப்பினையும் கடமைமீதுள்ள விசுவாசத்தையும் மறந்து விடுகின்றோம்.
தினம் தினம் போற்றவேண்டிய ஆசிரியர்கள் உலகமயமாதலாலும் காலவோட்டத்தினாலும் குறைந்தபட்சம் ஆண்டில் ஒருதடவையாவது கௌரவப்படுத்தபட வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்த அற்புதமான சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அறிவுத் தீபங்களை அணையாமல் நன்றியுடன் பெருமைப்படுத்துவோம் என்பதுடன் அவர்களை சகலவிதமான சுரண்டல்களில் இருந்தும் காப்பாற்ற இன்றைய நாளில் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






